×

அதிக விலை, பதுக்கல் புகார் எதிரொலி: 3,391 உரக்கடைகளில் 1,500 அதிகாரிகள் ரெய்டு.! தமிழகம் முழுவதும் அதிரடி

சென்னை: விவசாயிகளுக்கு அதிக விலைக்கு உரங்கள் விற்பனை, பதுக்கி வைத்தல், தட்டுப்பாட்டை ஏற்படுத்துதல் போன்ற புகார்களால், தமிழகம் முழுவதும் 3,391 உரக்கடைகளில் 1500 அதிகாரிகள் நேற்று அதிரடியாக ஆய்வு செய்தனர். அதில் முறைகேட்டில் ஈடுபட்ட 101 உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் விவசாயிகள் பயிர் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் நெல் நடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில், மாநிலம் முழுவதும் உரங்களை பதுக்கி வைத்திருப்பதாகவும், இதனால் உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், உரங்களை மாற்றி விற்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி விவசாயத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துறையின் செயலாளர் சமயமூர்த்தி ஆகியோர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.

மேலும், தமிழகத்தில் இருப்பில் உள்ள உரங்கள், மாவட்டம் வாரியாக விநியோகம் ெசய்யப்பட்ட உரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நிறுவனம் வாரியாக எவ்வளவு  யூரியா, டிஏபி,  வந்தது குறித்தும், குறைவாக உற்பத்தி நிறுவனத்திடம்  இருந்து, அரசுக்கு சப்ளை ஆனது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 12339 உரக்கடைகளில் சோதனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதில் கூட்டறவு சங்கங்கள் மூலம் 4357 கடைகளும், தனியார் நடத்தும் 7982 கடைகளும் அடங்கும். அதில், திருவள்ளூரில் 260 கடைகளும், செங்கல்பட்டில் 221 கடைகளும், காஞ்சிபுரத்தில் 110 கடைகளும் உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள கடைகளில் சோதனை நடத்த மாவட்டங்களில் உள்ள விவசாயத்துறை இணை இயக்குநர்கள் தலைமையில் 1500 பேர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நேற்று ஒரே நாளில் 3391 கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது அதிக விலைக்கு விற்பனை, பதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு மிஷன் மூலம் பில் போடாமல் இருப்பது, விற்பனையாகாத உரங்களை மாற்றி விற்பனை செய்வது, செயற்கையாக பற்றாக்குறை உருவாக்குவது ஆகிய முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இந்த முறைகேடுகளைப் பொறுத்து, தவறு செய்த கடைகளின் உரிமம் ரத்து, விளக்கம் கேட்பது, உரங்கள் சப்ளை செய்வது நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டன.

இந்த அதிரடி சோதனை குறித்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் சாதகமான பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  குறிப்பாக சம்பா நெல் நடவு பணிகள் 13.168 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பு சம்பா நடவு பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதால் உரத் தேவை அதிகரித்துள்ளது. உர விற்பனை தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உர கண்காணிப்பு மையம் செயல்படுகிறது. விவசாயிகள் உர கண்காணிப்பு மையத்தினை தொடர்பு கொண்டு உரம் தொடர்பான புகார்களை பதிவு செய்து வருகின்றனர். விவசாயிகள் தெரிவிக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (8ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் 3,391 தனியார் உரக்கடைகளில் வேளாண்மை துறையினரால் உரம் இருப்பு, நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்களை விற்பனை செய்தல் மற்றும் விற்பனை முனைய கருவியின் வாயிலாக பட்டியலிட்டு உரங்களை விற்பனை செய்தல் முதலான பணிகளை ஆய்வு செய்தனர்.

புத்தக இருப்பு, உண்மை இருப்பு மற்றும் வித்தியாசம் காணப்பட்ட விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்பிற்கும் வித்தியாசம் காணப்பட்ட 84 உரக்கடைகளின் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உரம் இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த தகவல் பலகை பராமரிக்காத 16 உரக்கடைகள் மீது எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத கூடுதலாக உரம் இருப்பு வைத்துள்ள உரக்கடை உரிமையாளர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படும். மானிய உரங்களை விற்பனை முனைய கருவியில் பட்டியலிடப்பட்டு விற்பனை செய்யாத ஒரு உரக்கடையை தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் வழிகாட்டுதல் முறைகளின்படி உரங்களை விற்பனை முனைய கருவியின் மூலம் விவசாயியின் ஆதார் எண்ணையும் பயன்படுத்தி உரக்கடை உரிமையாளர்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். நிர்ணயம் செய்த விற்பனை விலையில் மட்டுமே உரங்கள் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாமல் உர விற்பனை செய்யும் உரக்கடை உரிமையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க உரக்கடைகள் வேளாண்மைத்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , High price, hoarding complaint echoes: 1,500 officers raid 3,391 grocery stores.! Action throughout Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...